சிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களை பெற அதிமுக புது வியூகம் – ஜெ.எம்.பஷீருக்கு பதவி வழங்கப்பட்டதன் பின்னணி

வரும் சட்டபேரவைத் தேர்தலில் சிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களைப் பெற அதிமுக தலைமை ஜெ.எம்.பஷீருக்கு சிறுபான்மையினர் நலப்பிரிவின் துணை செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

தேர்தலையொட்டி அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.,ஜ.க, தே.மு.தி.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் என அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் வாழ்த்து பெறும் ஜெ.எம்.பஷீர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. அதே நேரத்தில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம்பிடித்திருப்பதால் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்குமா என்ற கேள்விகுறி ஏற்பட்டிருக்கிறது. அதனால் சிறுபான்மை பிரிவினரின் ஓட்டுக்களைப் பெற அ.தி.மு.க தலைமை அந்தப் பிரிவை பலப்படுத்த முடிவு செய்திருக்கிறது.

அதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என இருவரிடமும் நெருக்கமான இளைஞரான ஜெ.எம்.பஷீருக்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஜெ.எம்.பஷீர், தமிழகம் முழுவதும் உள்ள சிறுபான்மை பிரிவினரைச் சந்தித்து அ.தி.மு.கவுக்கு வாக்குகளை கடந்த தேர்தல்களில் சேகரித்து வந்தார்.

அதோடு வக்ஃபு வாரிய தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிக்காக உழைத்தார். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அவருக்கு இந்தப்பதவியை கட்சித் தலைமை வழங்கியிருக்கிறது.

ஜெ.எம்.பஷீருக்கான பதவி அறிவிப்பு

 தி.மு.க-வில் சிறுபான்மைபிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.கவும் அந்தப்பிரிவினரின் ஓட்டுக்களை குறி வைத்தே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிகிறது. விரைவில் அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு சார்பில் மாநாடு ஒன்றையும் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் பதவி பெற்ற ஜெ.எம்.பஷீர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றியிருக்கிறார். அப்போது சிறுபான்மை பிரிவினரின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் நீங்கள் இருவரும் சிறுபான்மை பிரிவினரின் இரு கண்கள் என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *