அரிசோனாவிலும் ஜோ பைடன் வெற்றி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் முன்நிறுத்தப்பட்டார்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில்  அதிபர் வேட்பாளருக்கு மக்கள் நேரடியாக வாக்களிப்பது இல்லை. அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.  ஒரு மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெறும் வேட்பாளருக்கு அந்த மாகாணத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் கிடைக்கும்.

கடந்த 7-ம் தேதியே ஜோ பைடனின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அன்றைய தினமே அவர் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டார். இந்நிலையில் அரிசோனா மாகாணமும்  இன்று ஜோ பைடன் வசமானது. இந்த மாகாணம் குடியரசு கட்சியின் கோட்டையாக கருதப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அரிசோனாவில் வெற்றி பெற்றுள்ளார்.  இதன்மூலம் அவருக்கு கூடுதலாக 11 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன.

அரிசோனா மாகாண தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக அந்த மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரிசோனா மாகாண அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிபர் தேர்தலில் எவ்வித மோசடியும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், நீதிமன்ற வழக்குகள் மூலம் தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவரது முயற்சிகள் வெற்றி பெறாது. திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய  அதிபராக ஜோ பைடன் பதவியேற்பார் என்று அமெரிக்க அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *