‘கைலாசா’ இந்தியாவுக்கே சொந்தம்.. நித்யானந்தா பரபரப்பு அறிவிப்பு…

‘கைலாசா’ இந்தியாவுக்கே சொந்தம் என்று நித்யானந்தா அறிவித்துள்ளார். ஆனால் அந்த நாடு எங்கிருக்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தின் திருவண்ணாமலையில் பிறந்து கர்நாடகாவின் பிடதியில் ஆசிரமம் அமைத்து அடுத்தடுத்து பாலியல் சர்ச்சைகளில் சிக்கினாலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெப்பே காட்டிவிட்டு எங்கோ பறந்துவிட்டார் நித்யானந்தா.

அவர் எங்கிருக்கிறார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது எங்கோ இடிக்கிறது. இருப்பினும் அதற்கு யாரிடமும் விடையில்லை.

கைலாவின் ரிசர்வ் வங்கி
கைலாவின் ரிசர்வ் வங்கி

புதிய நாடு கைலாசா

டிரினிடாட் அண்ட் டொபாகோ அல்லது ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி புதிய நாட்டை நித்யானந்தா உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த நாட்டு கைலாசா என்று அவர் பெயரிட்டுள்ளார். புதிய நாடு குறித்து அனைத்து தகவல்களும் www.kailaasa.org இணையத்தில் இடம்பெற்றுள்ளன.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையமான இத்தாலி தலைநகர் ரோமை ஒட்டி அமைந்துள்ள வாடிகன், தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதே பாணியில் நித்தி தனது புதிய நாட்டை உருவாக்கியுள்ளார்.

அவர் உருவாக்கிய கைலாசாவின் ஆட்சி மொழிகளாக ஆங்கிலம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்சி நிர்வாகத்துக்காக உள்துறை, பாதுகாப்பு, நிதி, வீட்டு வசதி, கல்வி, மனித நேய சேவை என தனித்தனி துறைகளையும் ஏற்படுத்தியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த விநாயகர் சதுர்த்தியின்போது கைலாசாவின் ரிசர்வ் வங்கியை ஏற்படுத்தி காலணா முதல் 10 காசு வரையிலான தங்க நாணயங்களை நித்தி வெளியிட்டார்.

நித்யானந்தாவின் கைலாசா பாஸ்போர்ட் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்.
நித்யானந்தாவின் கைலாசா பாஸ்போர்ட் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வலம் வரும் புகைப்படம்.

ஹிந்து பாராளுமன்றம்

மேலும் கைலாசாவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. சுமார் ஐந்தரை மணி நேரம் ஓடும் அந்த வீடியோ அவரது யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹிந்து பாராளுமன்றம் என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. எதற்காக நாட்டை விட்டு வெளியேறினேன் என்பது உட்பட தனது கடைசி காலம் வரை தெளிவாக நித்தி குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவரது பேச்சு வழக்கம்போல சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.
ஒரு விஷயத்தை அவர் தெளிவாக குறிப்பிடுகிறார்.

எனது மரணத்துக்குப் பிறகு கைலாசா நாடு இந்தியாவுக்கே சொந்தம் என்று அறுதியிட்டு கூறுகிறார்.

புதிய வெப் டிவி தொடக்கம்

புதிதாக வெப் டிவி ஒன்றையும் https://nithyananda.tv நித்யானந்தா உருவாக்கியுள்ளார். அதிலும் அவரது வீடியோக்கள் நிறைந்திருக்கின்றன. அவரது பெயரில் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளும் செயல்படுகின்றன.

மேலும் நித்தியின் புகழை பரப்பும் வகையில் www.nithyananda.org என்ற பெயரில் தனி இணையதளம் செயல்படுகிறது. அந்த இணையத்தில் நுழைந்தவுடன் ஆன்லைனில் சேட்டிங் செய்ய அழைப்பு விடுக்கப்படுகிறது.

இந்த சேட்டிங் மூலம் கைலாசாவில் குடியேற பலரும் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை சுமார் 40 லட்சம் பேர் கைலாசாவில் குடியேற விருப்பத்தை பதிவு செய்திருப்பதாக நித்தியே கூறியிருக்கிறார்.

விரைவில் கைலாசா நாட்டுக்கான பாஸ்போர்ட் மற்றும் வெளிநாட்டினருக்கான விசாக்கள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைலாவின் இ- குடியுரிமை கோருவோர் www.kailaasa.org இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *