திருமணமான 45-வது நாள்;குளியலறையில் உயிரிழந்த காஞ்சிபுரம் இளம்பெண்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் திருமணமான 45-வது நாளில் குளிக்கச் சென்ற இளம்பெண் குளியலறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் வேலைப்பார்க்கிறார். இவரின் மனைவி ஜெயந்தி (43). சிபிஐஎம் கட்சியின் மாதர் சங்கத் தலைவியாக உள்ளார். இவரின் மூத்த மகள் செந்தாரகை(23).

இவருக்கும் உத்திரமேரூர் நரசிம்மநகரைச் சேர்ந்த யுவராஜிக்கு கடந்த 24.5.2020-ல் திருமணம் நடந்தது. இல்லற வாழ்க்கையை இருவரும் சந்தோஷமாக தொடங்கினார். ஊரடங்கையொட்டி செந்தாரகை அம்மா வீட்டுக்கு வந்தார்.

என் மகளின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. கணவர் குடும்பத்தினரும் என் மகளை துன்புறுத்தவும் செய்யவில்லை

ஜெயந்தி

குளியலறை

8.7.2020-ம் தேதி சமையல் வேலைக்கு உதவி செய்துவிட்டு செந்தாரகை குளிக்கச்சென்றாள். குளியலறையிலிருந்து நீண்ட நேரமாகியும் அவள் வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி, குளியலறையின் கதவை தட்டினார். அப்போதும் எந்தவித பதிலும் வரவில்லை.

அதனால் குளியலறையில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது குளியலறைக்குள் செந்தாரகை மயங்கி கிடப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந்தி, பாலாஜி ஆகியோர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மூச்சு பேச்சு இல்லாமல் செந்தாரகை கிடந்தார். அவருக்கு ஜெயந்தியும் பாலாஜியும் முதலுதவி செய்தனர். ஆனால் செந்தாரகை கண்விழிக்கவில்லை.

திருமணமான 45-வது நாளில் உயிரிழந்த செந்தாரகை

சந்தேகம்

இதையடுத்து செந்தாரகைக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. செந்தாரகை மரணம் குறித்த தகவல் உத்தரமேரூர் காவல் நிலையத்துக்கு தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து விசாரித்தனர்.

பின்னர் செந்தாரகையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 174 (3) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் “செந்தாரகை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் கூறியுள்ளனர். அதனால்தான் அவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் குளியலறையில் வழுக்கி விழுந்திருந்தால் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் அவரின் உடலில் அதுபோன்ற காயங்கள் தென்படவில்லை.

ஜெயந்தி

அவர் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தப்பிறகுதான் சொல்ல முடியும். செந்தாரகையின் வாழ்க்கையில் நடந்த கசப்பான ஒரு சம்பவத்துக்குப்பிறகு அவர் மனவேதனையில் இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாக அவரின் குடும்பத்தினரிடமும் கணவரிடமும் விசாரித்துவருகிறோம்.

செந்தாரகையின் அம்மா ஜெயந்தி கொடுத்த புகாரில் `என் மகளின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. கணவர் குடும்பத்தினரும் என் மகளை துன்புறுத்தவும் செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளார்” என்றனர்.

செந்தாரகை மரணம் உத்திரமேரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *