காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷவரன் (28). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ரோஜாவுக்கும் கடந்த 2019 ஜூனில் திருமணம் நடந்தது.ரோஜாவும் விக்கியும் காஞ்சிபுரத்தில் குடியிருந்து வந்தனர்.
மனைவிக்கு டெலிவரி
ரோஜா, கர்ப்பமடைந்தார். அதனால் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக விக்கியால், மனைவியைச் சந்திக்க முடியவில்லை. இன்னும் சில தினங்களில் ரோஜாவுக்கு குழந்தைப் பிறக்கும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். “என்னுடைய டெலிவரி நேரத்தில் நீங்கள் என் கூட இருந்தால் தைரியமாக இருக்கும்” என போனில் ரோஜா, கணவரிடம் கூறியுள்ளார். அப்போது கண்டிப்பாக வந்துவிடுகிறேன் என்று விக்கி கூறியுள்ளார்.
இதையடுத்து காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு செல்ல இ-பாஸிக்கு விக்கி விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் இ-பாஸ் கிடைக்கவில்லை. அதனால் மனைவியைச் சந்திக்க முடியாமல் விக்கி மனவேதனையில் இருந்துள்ளார். அதுகுறித்து வீட்டில் உள்ளவர்களிடமும் புலம்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
விரக்தியில் தற்கொலை
இந்தச் சமயத்தில் விக்கியைச் சந்திக்க அவரின் நண்பர் வீட்டுக்கு வந்தார். அப்போது விக்கி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சிவ காஞ்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், சம்பவ இடத்துக்கு வந்து விக்கியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்கி தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
ரோஜாவுக்கு குழந்தைப் பிறக்க உள்ள சூழலில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.