கடந்த 1892-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்த சுவாமி விவேகானந்தர் கடலுக்குள் சுமார் 500 மீட்டர் நீந்திச் சென்று அங்கிருந்த பெரிய பாறையில் 3 நாட்கள் கடும் தவத்தில் இருந்தார்.
அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு ஞானம் வழங்கிய கன்னியாகுமரி பாறையில் நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 1963-ல் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அமைப்புச் செயலாளராக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஏக்நாத் ரானடே நியமிக்கப்பட்டார்.
323 எம்.பி.க்கள் ஆதரவு
திடீரென கன்னியாகுமரி பாறையை மற்றொரு மதத்தினர் உரிமை கொண்டாடினர். அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் பதவி வகித்தார். மதரீதியான பிரச்சினை காரணமாக அவர் நினைவு மண்டப திட்டத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஏக்நாத் ரானடே டெல்லியில் லால் பகதூர் சாஸ்திரியை சந்தித்து பிரச்சினையை கூறினார்.
அவரது ஆலோசனையின்பேரில் கன்னியாகுமரியில் விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு ஆதரவாக 323 எம்.பி.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் அன்றைய பிரதமர் நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
நேரு ஒப்புதல்
நேரு ஒப்புதல் அளித்த பிறகு அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலத்தால் விவேகானந்தர் நினைவு மண்டல திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த 1964-ல் கன்னியாகுமரி பெரிய பாறையில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. தலைமை ஸ்தபதி எஸ்.கே. ஆச்சாரி தலைமையில் ஆறே ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று கடந்த 1970 செப்டம்பர் 2-ம் தேதி விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது.

அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி திறப்பு விழாவுக்கு தலைமை வகித்தார்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு கடந்த 2-ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.அரை நூற்றாண்டை கடந்தும் நினைவு மண்டபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
யார் இந்த எஸ்.கே.ஆச்சாரி?
காரைக்குடி அருகே தேவக்கோட்டையை சேர்ந்த எஸ்.கே. ஆச்சாரி தலைமை ஸ்தபதியாக இருந்து விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார்.
முதலில் 6 சிற்பிகளுடன் கட்டுமானப் பணி தொடங்கியது. பின்னர் 400-க்கும் மேற்பட்ட சிற்பிகள் இரவும் பகலும் பணியாற்றி கட்டுமான பணிகளை விரைவுபடுத்தினர். அம்பாசமுத்திரத்தில் இருந்து புளு கிரானைட்டும் தூத்துக்குடி பகுதியில் இருந்து ரெட் கிரானைட் கற்களும் கொண்டு வரப்பட்டன.
நினைவு மண்டபத்துக்காக மொத்தம் 6 ஆயிரம் டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மட்டுமன்றி, திருவண்ணாமலை ரமண மகரிஷி சமாதி மண்டபம், திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில் உள்ளிட்ட புண்ணிய தலங்களை எஸ்.கே.ஆச்சாரி கட்டியுள்ளார்.