கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் கடந்த ஜூன் 25 முதல் கடந்த 3-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. கல்வியாளர்கள், பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாநில அரசு தேர்வை நடத்தியது.
இந்நிலையில் தேர்வெழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் கொரோனா காய்ச்சல் அறிகுறிகளுடன் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல்களை மாநில கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் மறுத்துள்ளார். எனினும் வரும் காலத்தில் மாணவர்களின் உடல்நலன் சார்ந்த விவகாரங்களில் மாநில அரசு ‘ரிஸ்க்’ எடுக்கக்கூடாது என்று பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர்.