கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்தியது கேரளா. 6-வது இடத்தில் இருந்த கேரளா 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று 86 ஆயிரத்து 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 58 லட்சத்து 18 ஆயிரத்து 570 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 47 லட்சத்து 56 ஆயிரத்து 164 பேர் குணமடைந்துள்ளனர். 9 லட்சத்து 70 ஆயிரத்து 116 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 1,141 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 92 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.
முதலிடத்தில் மகாராஷ்டிரா
தேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2,75,404 பேர் கொரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள கர்நாடகாவில் 95 ஆயிரத்து 568 பேர், மூன்றாவது இடத்தில் உள்ள ஆந்திராவில் 69 ஆயிரத்து 353 பேர், நான்காவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 61 ஆயிரத்து 300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. 2-வது நாளாக அந்த மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு 6 ஆயிரத்து தாண்டியுள்ளது.
கேரளாவில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 933 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 331 பேர் குணமடைந்துள்ளனர். 48 ஆயிரத்து 892 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
6-வது இடத்தில் தமிழகம்
தேசிய அளவிலான கரோனா வைரஸ் பாதிப்பில் 6-வது இடத்தில் இருந்த கேரளா நேற்று 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தமிழகம் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 679 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 386 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் இன்று 72 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 1,193 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் 661 பேர், செங்கல்பட்டில் 277 பேர், திருவள்ளூரில் 229 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 36,038 பேர், ஒடிசாவில் 35,092 பேர், டெல்லியில் 31,125 பேர், தெலங்கானாவில் 30,387 பேர், அசாமில் 29,830 பேர், மேற்குவங்கத்தில் 25,221 பேர், மத்திய பிரதேசத்தில் 22,744 பேர், பஞ்சாபில் 20,679 பேர் கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.