கேரள தங்க கடத்தல் மன்னன், கடன்காரனா! கொள்ளையடித்த கோடிகளை கொட்டியது எங்கே?

கடந்த 3-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்தது. ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. எக்ஸ்ரே பரிசோதனையில் பார்சலுக்குள் உலோகம் இருப்பது தெரியவந்தது.


தூதரகத்தில் கேட்டபோது பேரிச்சம் பழம், பிஸ்கெட் இருப்பதாக பதில் அளிக்கப்பட்டது. தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் என்பதால் சுங்கத் துறை அதிகாரிகள் அதனை பிரிக்கவில்லை.

swapna suresh
ஸ்வப்னா சுரேஷ்


டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் உயரதிகாரிகள் திருவனந்தபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். கடந்த 5-ம் தேதி பார்சல் திறக்கப்பட்டது. 72 கிலோ எடை கொண்ட அந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்தது. அதன் மதிப்பு 13 கோடி ரூபாயாகும்.
இந்த தங்க கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் ஸ்வனப்னா சுரேஷை மையமாகக் கொண்டு தங்க கடத்தல் நடைபெற்றது. இந்த கடத்தல் கூட்டத்தின் தலைவனாக பைசல் பரீத் செயல்பட்டுள்ளார். துபையில் இருந்து அவர் தங்கத்தை அனுப்ப, ஸ்வப்னா குரூப் தங்கத்தை பெற்று உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளது.


ஹவாலா, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் என பல புள்ளிகள் கேரள தங்க கடத்தல் வழக்கை தொட்டு நிற்கின்றன. தங்க கடத்தல் மன்னர் பைசல் பரீத் சில நாட்களுக்கு முன்பு துபாயில் கைது செய்யப்பட்டார். தூதரக நடைமுறைகளுக்குப் பிறகு அவர் இந்தியா கொண்டு வரப்பட உள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்கம்.


இதனிடையே வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள், பைசல் பரித்தின் 3 வங்கிக் கணக்குகளை கண்டறிந்துள்ளனர். இந்த 3 கணக்குகளில் மூன்றாயிரத்துக்கும் குறைவாகவே பணம் உள்ளது. ஒரு வங்கிக் கணக்கு மூலம் அவர் வாகன கடன் பெற்றுள்ளார். அந்த வாகன கடன் தவணையை செலுத்தாமல் உள்ளார்.

மற்றொரு வங்கியில் 50 லட்சத்துக்கு கடன் பெற்றுள்ளார். அதில் 37 லட்சம் ரூபாயை இன்னும் செலுத்தவில்லை.
தங்க கடத்தல் மூலம் கோடிகளில் புரண்ட பைசல் பரீத், சொற்ப வங்கிக் கடனை செலுத்தாமல் கடன்காரனை போல வாழ்ந்துள்ளார். அவர் கொள்ளையடித்த கோடிகள் எங்கே என்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கேரள திரைப்பட துறையில் பைசல் பரீத் பல கோடிகளை கொட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பணம் எப்படி கைமாறியது? மலையாள திரையுலகில் யார் யாரெல்லாம் பைசலுடன் தொடர்பில் இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *