கேரள தங்க கடத்தல் வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்

கேரள தங்க கடத்தில் வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளது.


கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.15 கோடியாகும். அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


விசாரணையில் சுங்கத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி சரித் குமாருக்கு தங்க கடத்தலில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.


சரித் குமாரும் ஸ்வப்னா சுரேஷும் சேர்ந்து இதுவரை சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கேரளாவுக்கு கடத்தி வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தற்போது ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வந்தார். அந்த துறையின் செயலாளர் சிவசங்கருக்கும் ஸ்வப்னாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. முதல்வரின் தனிச் செயலாளராகவும் சிவசங்கர் பணியாற்றி வந்தார்.


மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் செல்வாக்கை பயன்படுத்தி ஸ்வப்னா தங்க கடத்தலை வெற்றிகரமாக நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அரசியல் நெருக்கடி காரணமாக சிவசங்கரன் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

ஸ்வபனா தலைமறைவாக உள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், தங்க கடத்தலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்தார். முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்.


இதனிடையே தங்க கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
என்ஐஏ தனது விசாரணையை தொடங்கும்போது தங்க கடத்தல் வழக்கில் பல்வேறு பூதங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *