கேரள அரசு மருத்துவமனையில் கவனக்குறைவு, அலட்சியத்தால் கொரோனா நோயாளி உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தலைமை செவிலியரின் ஆடியோவால் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறையின் உயர்நிலைக் குழு கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அண்மையில் ஆய்வு செய்தது.
கொச்சி அருகேயுள்ள கலமசேரியில் ‘எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை’ செயல்படுகிறது. மத்திய குழுவினரின் ஆய்வின்போது எச்சரிக்கையாக இருக்கும்படி அங்கு பணியாற்றும் தலைமை செவிலியர் ஜலஜா தேவி, சக செவிலியர்களுக்காக வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்றை பதிவு செய்தார்.
அதில், “கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் முகக்கவசம், வென்டிலேட்டர் குழாய்கள் சரியாக மாட்டப்படவில்லை என்றும், நம்முடைய (செவிலியர்கள்) கவனக்குறைவால் நோயாளிகள் உயிரிழப்பதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டில் நாம் மாட்டிக் கொண்டால் மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவிடும்.
அண்மையில் ஹாரிஸ் என்ற கொரோனா நோயாளி உயிரிழந்தார். அவர் சிகிச்சைபெற்றபோது வென்டிலேட்டர் குழாய் அவரது முகத்தில் மாட்டப்படவில்லை.
அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவையில்லை என்றபோதும் அவரது உறவினர்கள் இப்போதுவரை குற்றம் சாட்டி வருகின்றனர். நல்லவேளையாக மருத்துவர்கள் எதுவும் கூறாததால் பிரச்சினை பெரிதாகவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த வாட்ஸ் அப் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செவிலியர் ஜலஜா தேவி தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாட்ஸ் அப் வீடியோவை ஆதாரமாக வைத்து ஹாரிஸ் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். “கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்படுகின்றனர்” என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக உயர்நிலை விசாரணை கோரி முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “இந்த விவகாரத்தால் கேரள சுகாதாரத் துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை மிக தீவிர பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை நிர்வாகம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.