கேரள தங்க கடத்தலில் அமைச்சர் ஜலால் சிக்குகிறார்- ஸ்வப்னாவுடன் 8 முறை செல்போனில் பேசியது அம்பலம்

கேரள தங்க கடத்தல் வழக்கில் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஜலால் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளி ஸ்வப்னாவுடன் அவர் 8 முறை செல்போனில் பேசியிருப்பது அம்பலமாகியுள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வழக்கின் மற்றொரு குற்றவாளி பைசல் பரீத் துபாயில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


கேரள தகவல் தொழில்நுட்ப துறை செயலாளரும் முதல்வர் பினராயி விஜயனின் தனிச் செயலாளருமான சிவசங்கரனுடன், ஸ்வனப்னாவுக்கு நெருக்கமான தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சிவசங்கரன் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தற்போது கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஜலாலுக்கும், ஸ்வப்னாவுடன் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது. இருவரும் 8 முறை செல்போனில் பேசியிருப்பதை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக தூதரகம் கேட்டுக் கொண்டதால், ஸ்வப்னாவுடன் பேசினேன் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அவரும் சந்தேக வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளார்.


இதற்கு முன்பு 12-க்கும் மேற்பட்ட தடவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஸ்வப்னாவும் அவரது கூட்டாளிகளும் பெருமளவில் தங்கத்தை கடத்தி கொண்டு வந்துள்ளனர். அந்த தங்கம் எவ்வாறு கடத்தப்பட்டது. யார் யாருக்கெல்லாம் கைமாற்றப்பட்டது என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சந்தீப் நாயரிடம் இருந்து முக்கிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பல்வேறு சங்கேத வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் ஜலால், ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *