கோழிக்கோட்டில் கோர விமான விபத்து..16 பேர் பலி..174 பேர் படுகாயம்

‘வந்தே பாரத்’ திட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து 191 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு கேரளாவின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானம் தரையிறங்கியபோது ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்து தீப்பிடித்து எரிந்தது.


2 விமானிகள் விமானத்தை இயக்கினர். 4 ஊழியர்கள் இருந்தனர். மேலும் 10 குழந்தைகளும் விமானத்தில் பயணம் செய்தனர். விபத்தில் 2 விமானிகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 174 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டுக்கு 191 பேருடன் வந்த பயணிகள் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.


தீயணைப்பு படை வீரர்கள், மாநில போலீஸார், மாவட்ட பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமான பயணிகள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமான விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் ஐஜி அசோக் யாதவ் ஆகியோர் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு சென்றிருப்பதாகவும் மீட்புப் பணிகள் துரிதப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடியிடம் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கோழிக்கோடு விமான நிலையத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ்.


விபத்து குறித்து கோழிக்கோடு விமான நிலைய வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
“கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. துபாயில் இருந்து வந்த பயணிகள் விமானம் இரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.


இதனால் விமானிகளால் ஓடுபாதையை சரியாக கணித்திருக்க முடியாது என்று கருதுகிறோம். ஓடுபாதையில் இருந்து விமானம் விலகி, விமான நிலையத்தின் சுவரை உடைத்து கொண்டு 35 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் விமானம் இரண்டாகப் பிளந்து, பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.

விமான விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைகள்


உடனடியாக தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்குள்ளான விமானம், போயிங் 737 ரக விமானமாகும். விமானத்தை இயக்கிய தீபக் அனுபவம் வாய்ந்த விமானியாகும். மோசமான வானிலை காரணமாகவே விபத்து நேரிட்டிருக்கக்கூடும்” என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கோழிக்கோட்டில் நேரிட்ட விமான விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


கோழிக்கோடு விமான நிலையத்தில் அவசர உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அவசர உதவி மையத்தை 0483-2719493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் 0495-2376901 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *