சில்லி சிக்கன் வாங்கிட்டு வா; குழந்தையைக் கடத்திய கும்பல் சிக்கியது எப்படி

கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலையத்துக்குட்பட்ட பழைய பேருந்து நிலைய பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 28ம் தேதி ஆனைமலை பேருந்து நிலையத்தில் 5 மாத குழந்தையுடன் சங்கீதா பிச்சை எடுத்திருக்கிறார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனக்கு சில்லிசிக்கன் வாங்கிவரும்படி சங்கீதாவிடம் 50 ரூபாயைக் கொடுத்திருக்கிறார். அதனால் குழந்தையை அந்த நபரிடம் விட்டுவிட்டு சில்லிசிக்கன் வாங்க சங்கீதா சென்றிருக்கிறார்.

சங்கீதா திரும்பி வந்து பார்த்தபோது 5 மாத குழந்தையும் அடையாளம் தெரியாத நபரையும் காணவில்லை. அதனால் சங்கீதா ஆனைமலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி மூலம் 5 மாத குழந்தையும் அடையாளம் தெரியாத நபரையும் தேடினர்.

குழந்தை மீட்க மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை தலைவர் முத்துசாமி வழிகாட்டுதலின்படி மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். சுமார் 20 கி.மீட்டர் தூரம் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தபோது அங்களக்குறிச்சி கிராமத்தில் குழந்தையைக் கடத்திச் சென்ற நபரையும் அவருக்கு உதவியவர்களையும் போலீஸார் சுற்றி வளைத்தனர்.

இன்ஸ்பெக்டர் கற்பகம் நடத்திய விசாரணையில் குழந்தையைக் கடத்திச் சென்றவர்கள் ராமர், முருகேசன் எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் குழந்தையைக் கடத்தி முத்துப்பாண்டி என்பவரிடம் 90000 ரூபாய்க்கு விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அதோடு குழந்தையை மீட்டு சங்கீதாவிடம் போலீஸார் ஒப்படைத்தனர். குழந்தை கிடைத்த சந்தோஷத்தில் காவல்துறையினருக்கு கண்ணீர்மல்க சங்கீதா நன்றி தெரிவித்தார்.

குழந்தையைக் கடத்தியவர்கள் சிக்கியது எப்படி என போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சங்கீதாவுக்கு 4 குழந்தைகள். சங்கீதாவும் அவரின் கணவர், குழந்தைகள் ஆகியோர் ஒவ்வொரு இடமாகச் சென்று தங்கி பிழைப்பு நடத்திவருகின்றனர்.

ஆனைமலை பேருந்து நிலையத்தில் சங்கீதா குடும்பத்தினரோடு தங்கியிருந்தார். அப்போது அவரின் 5 மாத குழந்தையைப் பார்த்த ஒருவர், அதை கொஞ்சிவிட்டு தருகிறேன் என்று கூறியிருக்கிறார். பின்னர் குழந்தையோடு பாசமாக விளையாடிய அந்த நபர், சில்லிசிக்கன் வாங்க பணமும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் சங்கீதா அந்த நபரை நம்பியிருக்கிறார்.

இந்தச் சமயத்தில் குழந்தையோடு அந்த நபர் டூவிலரில் வந்த ஒருவரோடு எஸ்கேப் ஆகிவிட்டார். வண்டியின் பதிவு நம்பரை வைத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை பிடித்துவிட்டோம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் குழந்தையை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் நல்லதொரு உதாரணம். எனவே பொதுமக்கள் குழந்தைகளையும் உடமைகளையும் பொது இடங்களில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

குழந்தை கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் தனிப்படை போலீஸார் துரிதமாக செயல்பட்டு குழந்தையையும் கடத்தல் கும்பலையும் பிடித்தனர் அதனால் துணை தலைவர் முத்துசசாமி, தனிப்படை போலீஸாரை பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Follow us on :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *