கோயமுத்தூரில் கல்லூரி மாணவி, வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
கல்லூரி மாணவி
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் அந்தப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் ரதீஸ். இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.
இவர்களின் நட்புக்கு இருவீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் ரதீஸை சந்திப்பதை ஐஸ்வர்யா தவிர்த்துள்ளார். மேலும் அவரிடம் பேசாமல் 3 மாதங்களுக்கு மேல் இருந்துள்ளார்.
வாக்குவாதம்
ஐஸ்வர்யாவைச் சந்திக்க முடியாமல் தவித்த ரதீஸ், அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டு வாசலில் நிற்கிறேன் உன்னைப் பார்க்க வேண்டும் என செல்போனில் ஐஸ்வர்யாவிடம் ரதீஸ் பேசியுள்ளார்.
அப்போது வெளியில் வந்த ஐஸ்வர்யாவிடம் நீ என்னிடம் பேச வேண்டும் என்று ரதீஸ் கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா, என் நிலைமையைப் புரிந்து கொள் என்று கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கத்தி குத்து
ஆத்திரமடைந்த ரதீஸ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவை சரமாரியாக குத்தியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரின் தந்தை சக்திவேல், ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவருக்கும் கத்தி குத்து விழுந்துள்ளது. இதையடுத்து ரதீஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார். சக்திவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பேரூர் போலீசார், ரதீஸை தேடி வருகின்றனர்.
இது முதல் தடவையல்ல. காதலிக்க மறுக்கும் காதலிகள் காதலன்களால் கொலை செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகிவருகிறது. அதைப் போல காதலில் ஏற்படும் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலைகளும் தொடர்கின்றன.