கோவையில் கொரோனா மைசூர்பா விற்ற நெல்லை லாலா கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை பயன்படுத்தி கோவை சின்னியம்பாளையத்தை அடுத்த தொட்டிபாளையம் பகுதியில் செயல்படும் ஸ்ரீராம் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் கடை நிர்வாகம் வில்லங்க விளம்பரம் நோட்டீஸை பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளது. இந்த விளம்பர நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், தங்களது மூலிகை மைசூர்பாவை சாப்பிட்டால் ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய முடியும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த பார்முலாவை பிரதமர் நரேந்திர மோடிக்கு இலவசமாக தர தயாராக உள்ளோம் என்றும் தம்பட்டம் அடிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கோவை கலெக்டர் ராஜாமணி, அந்த இனிப்பு கடையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை, சித்த மருத்துவ துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 3 துறைகளின் அதிகாரிகளும் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். எவ்வித அனுமதியும் இன்றி, கொரோனா மைசூர்பா விற்ற கடைக்கு சீல் வைத்தனர். கடையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. கடை உரிமையாளரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட நிர்வாகம் கூறும்போது, “கொரோனாவை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் விளம்பரம் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு கடையில் பறிமுதல் செய்யப்பட்ட மைசூர் பா, அவற்றை தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்” என்று தெரிவித்தது.