மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க புதிய வழக்கு

மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.

ராமஜென்ம பூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதே பகவான் கிருஷ்ணர் அவதரித்த புண்ணியதலமான மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியையும் மீட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் குரல் எழுப்பின.

இதன்படி கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் கிருஷ்ண ஜென்மபூமி நிர்மாண் நியாஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 80 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்பது தொடர்பான பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு

ராமஜென்ம பூமி வழக்கில் அயோத்தி கோயிலின் மூல விக்கிரகமான ராம் லல்லா விராஜ்மன் (குழந்தை ராமர்) சார்பில் விஎச்பி மூத்த தலைவர் திர்லோகி நாத் பாண்டே வழக்கு தொடர்ந்தார். ராம் லல்லா விராஜ்மனின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பளித்தது.

இதேபோல மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ண விராஜ்மன் (குழந்தை கிருஷ்ணர்) சார்பில் மதுரா நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ண விராஜ்மன் சார்பில் லக்னோவை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி மனு தாக்கல் செய்துள்ளார். உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம், ஷாயி ஈத்கா மசூதி நிர்வாக அறக்கட்டளை ஆகியவை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

அவுரங்கசீப் ஆட்சிக் காலம்

ரஞ்சனா அக்னி ஹோத்ரி தனது மனுவில் பல்வேறு விவகாரங்களை சுட்டிக் காட்டியுள்ளார்.

“கடந்த 1658-ம் ஆண்டு முதல் 1707-ம் ஆண்டு வரை முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஏராளமான இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன.

கடந்த 1669-70-ம் ஆண்டுகளில் அவுரங்கசீப்பின் உத்தரவுபடி அவரது படை, மதுராவில் உள்ள கேசவ தேவ் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு ஷாயி ஈத்கா மசூதியை கட்டினர்.

மசூதி அமைந்துள்ள இடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ண விராஜ்மனுக்கு சொந்தமானது. அந்த ஆக்கிரமிப்பு மசூதியை அகற்ற வேண்டும்.

தற்போது மதுராவின் கத்ரா கேசவ் தேவ் பகுதியில் அமைந்துள்ள கோயில்களை, ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தா நிர்வகித்து வருகிறது.

இந்த அறக்கட்டளை ஷாயி ஈத்கா அறக்கட்டளையுடன் சட்டவிரோதமாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ண விராஜ்மனுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தாவுக்கும் ஷாயி ஈத்கா மசூதி நிர்வாக அறக்கட்டளைக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை விசாரித்த மதுரா நீதிமன்றம், தற்போதைய கட்டுமான அமைப்புகளில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

மதுராவின் கத்ரா கேசவ் தேவ் பகுதியின் ஒவ்வொரு அங்குல நிலமும் இந்துக்களின் புனித பூமியாகும். எனவே கிருஷ்ண ஜென்ம பூமியின் 13.37 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் கோயில்

உத்தர பிரதேசத்தின் காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அமைந்த இடத்தின் பாதியை இடித்து, கியான்வாபி மசூதி கட்டப்பட்டிருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தையும் மீட்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் வரும் 2022-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற மதுரா, காசி விவகாரங்களை பாஜக கையில் எடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *