மகப்பேறு மருத்துவரின் இறுதி சடங்கை நடத்திய தமுமுக- மமக தன்னார்வலர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்த 72 வயது விஷ்ணுபிரியா, அரசு டாக்டராக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு இவர் வீட்டின் அருகே கிளினிக் அமைத்து மகப்பேறு மருத்துவம் பார்த்து வந்தார். கைராசி டாக்டர் என பெயர் பெற்றதால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.


அண்மையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று கடந்த 30-ம் தேதி உறுதியானது. தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலை 1-ம் தேதி அவர் சேர்க்கப்பட்டார்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 6-ம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கை தமுமுக- மமக தன்னார்வலர்கள் நடத்தினர்.

எம்.எச்.ஜவாஹிருல்லா


இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கும்பகோணத்தின் புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவ நிபுணரும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமமூர்த்தியின் மனைவியுமான மருத்துவர் விஷ்ணுபிரியா கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.


அவரது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மமக அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா, தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உடலை அரசாங்க வழிகாட்டுதலின்படி பேக்கிங் செய்து தமுமுக அவசர ஊர்தி வாயிலாக கும்பகோணத்திற்கு உடலை எடுத்து சென்று அவர்களது மத நம்பிக்கையின்படி கும்பகோணம் பெருமாண்டி மயானத்தில் தகனம் செய்தனர்.


ஏராளமான குழுந்தைகள் பூமிக்கு வருகை தந்தபொழுது பிரசவம் பார்த்து உதவிய முன்னணி மகப்பேறு மருத்துவரான விஷ்னுபிரியாவின் இறுதிச் சடங்கை தமுமுக தொண்டர்கள் செய்தனர்.


தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 162 உடல்களையும், கொரோனா இல்லாத மரணமடைந்தவர்களின் 58 உடல்கள் என மொத்தம் 220 உடல்களை தமுமுக மமக தொண்டர்கள் அடக்கம் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *