கும்பகோணத்தில் கைராசி டாக்டர் என்ற பெயர் பெற்ற பெண் மகப்பேறு டாக்டர் கொரோனா வைரஸ் தொற்று இன்று உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பக்தபுரி தெருவை சேர்ந்த 72 வயது பெண் டாக்டர், அரசு டாக்டராக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு இவர் வீட்டின் அருகே கிளினிக் அமைத்து மகப்பேறு மருத்துவம் பார்த்து வந்தார். 72 வயதானாலும் எப்போதும் சிரித்த முகத்துடனும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றுவார்.
கைராசி டாக்டர்
கிளினிக்குக்கு வரும் கர்ப்பிணிகளிடம் இன்முகத்துடன் பழகுவார். கைராசி டாக்டர் என பெயர் பெற்றதால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
அண்மையில் அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா தொற்று கடந்த 30-ம் தேதி உறுதியானது. தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூலை 1-ம் தேதி அவர் சேர்க்கப்பட்டார்.
மேலும் 8 பேருக்கு தொற்று
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் உயிரிழந்தார். கைராசி மகப்பேறு டாக்டர் உயிரிழந்த சம்பவம் கும்பகோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டரின் கிளினிக்கில் பணியாற்றிய 4 பெண்களுக்கும் 4 உறவினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 8 பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.