பாஜகவில் குஷ்பூ இணைந்தார்

பாஜகவில் குஷ்பூ இணைந்தார். பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி ரவி, தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் இன்று அவர் பாஜகவில் ஐக்கியமானார்.

கடந்த 1970-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் குஷ்பூ பிறந்தார். அவரது இயற்பெயர் நகாத் கான். 

கடந்த 1980-ம் ஆண்டில் தி பர்னிங் டிரைன் என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கடந்த 1985-ம் ஆண்டில் ஜானோ இந்தி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஆனால் இந்தி திரையுலகம் அவருக்கு கைகொடுக்கவில்லை. தென்னிந்தியா பக்கம் திரும்பிய அவர் முதலில் தெலுங்கு திரையுலகில் கடந்த 1986-ல் கால் பதித்தார். 

தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் மட்டும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டில் இயக்குநர் சுந்தர் சி யை திருமணம் செய்தார். அவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். 

திரையுலகில் படவாய்ப்புகள் குறைந்தபிறகு சின்னத்திரையில் தோன்றினார். 

கடந்த 2010 மே 14-ம் தேதி திமுகவில் இணைந்தார். இதன்பின் 2014 நவம்பர் 26-ம் தேதி காங்கிரஸில் ஐக்கியமானார். இந்த பின்னணியில் இன்று அவர் காங்கிரஸை கைகழுவிவிட்டு பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி ரவி, தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *