நடிகை குஷ்பூ விபத்தில் சிக்கினார்
தமிழக பாஜக தலைவர் முருகன் கடந்த 6-ம்தேதி முதல் வேல் யாத்திரை நடத்தி வருகிறார். தீபாவளி விடுமுறைக்கு பிறகு நேற்று அவர் திருவண்ணாமலை வேல் யாத்திரையில் பங்கேற்றார். அடுத்த மாதம் 7-ம்தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரையை நிறைவு செய்கிரார்.
கடலூரில் இன்று வேல் யாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நடிகை குஷ்பு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் நோக்கி அவரது கார் சென்று கொண்டிருந்தது.

மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் சென்றபோது முன்னால் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த கண்டெய்னர் லாரியை குஷ்புவின் கார் முந்தி சென்றது.
அப்போது எதிர்பாராத விதமாக கண் இமைக்கும் நேரத்துக்குள் காரில் இடது பக்கத்தில் கண்டெய்னர் லாரி வேகமாக இடித்தது. இதில் காரின் பின் இருக்கை பகுதி பலத்த சேதமடைந்தது. சிறிது தூரம் கண்டெய்னர் லாரியில் உரசியபடியே குஷ்புவின் கார் சென்றது.

காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த குஷ்பு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். உடனடியாக குஷ்புவின் கார் டிரைவர் முருகன் சாமர்த்தியமாக காரை திருப்பி ஓரமாக நிறுத்தினார். இதன் காரணமாக குஷ்பு அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
மதுராந்தகம் போலீஸார் விபத்து குறித்து கண்டெய்னர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து குஷ்புவிடமும் விவரங்களை கேட்டு அறிந்தனர்.
இதுதொடர்பாக குஷ்பு கூறும்போது, “விபத்து நடைபெற்ற விதத்தை பார்க்கும் போது என் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் போலவே தெரிகிறது. என்னை கொல்வதற்கு சதி நடந்திருப்பதாகவே நான் உணருகிறேன். விபத்து பற்றி போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.