‘தி பர்னிங் டிரெயின்’ என்ற இந்தி திரைப்படத்தில் குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வளர்ந்த பிறகு அடுத்தடுத்து சில இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
பின்னர் தென்னிந்தியாவின் பக்கம் திரும்பினார். முதலில் தெலுங்கில் கால் பதித்தார். பின்னர் தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஒரு கால கட்டத்தில் ரசிகர்கள் அவருக்கு கோயிலே கட்டினர். ஓட்டல்களில் குஷ்பூ இட்லி அடி, தடியாக விற்பனையானது. வெள்ளித் திரைக்குப் பிறகு சின்னத் திரையிலும் அவர் கோலோச்சி வருகிறார். கலைத் துறை மட்டுமன்றி அரசியலிலும் அசத்துகிறார்.
பல மொழிகள், பன்முகத் திறமை கொண்ட குஷ்பூவுக்கு இப்போது 49 வயதாகிறது. எனினும் இன்றைய இளம் நடிகைகளோடு போட்டியிடும் வகையில் வாடாமலராக வலம் வருகிறார்.
உடல், மனநலன் தொடர்பாக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது யோகாசன புகைப்படங்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழக பெண்கள், திருமணமாகி ஒரு குழந்தையை பெற்று தாயாகிவிட்டாலே குடும்பத்துக்காக தேய்ந்து, காய்ந்து, உதிர்ந்து விடுகின்றனர். கடைசி மூச்சு வரை கணவர், குழந்தைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கின்றனர்.
அவர்கள் தங்கள் உடல்நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். வீட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும் என்ற உண்மையை குஷ்பூவின் புகைப்படங்கள் பேசுகின்றன.
இதற்காக, ஆஹா..ஓஹோ..அற்புதம்..பிரமாதம்.. என அத்தனை வார்த்தைகளையும் தொடுத்து குஷ்..பூ..வுக்கு புகழ் ஆரம் சூட்டலாம்.
ஆனால் சில நாதாரிகள், சமூக வலைதளங்களில் குஷ்பூவின் யோகாசன படத்துக்கு அநாகரிமான கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர். எதற்கும் அஞ்சாத நம்ம குஷ்பூ, நாதாரிகளின் பாஷையிலேயே நறுக்கென்று பதில் அளித்து வருகிறார்.