கொரோனா வைரஸுக்கு எதிராக போரிட்டு வரும் டாக்டர்கள் குடும்பத்தை பிரிந்து, உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் மனஅழுத்தத்தை போக்கவும் நோயாளிகளை உற்சாகப்படுத்தவும் மருத்துவமனைகளில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். சில வீடியோக்கள் விமர்சனங்களையும் சில வீடியோக்கள் வரவேற்பையும் பெற்று வருகின்றன.
அந்த வரிசையில் மும்பையை சேர்ந்த பெண் டாக்டர் ரிச்சா நெகி, கொரோனா பாதுகாப்பு கவச உடையில் பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்மையில் மருத்துவர்கள் தினத்தை கொண்டாடினோம். அன்றைய தினம் மருத்துவமனையில் இரவும் பகலும் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. நானும் எனது தோழியும் கொரோனா வார்டின் அவசர சிகிச்சைப் பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து நோயாளிகளைப் பரிசோதித்தோம்.
தொடர் பணியின்போது எனது மனஅழுத்தத்தைப் போக்க நடனமாடுவது வழக்கம். அன்றைய தினம் அப்படி கேசுவலாக நடனமாடினேன். அதை எனது தோழி வீடியோ எடுத்துவிட்டாள். அந்த வீடியோதான் இப்போது வைரலாக பரவி வருகிறது. எனது வீடியோவை எதிர்மறையாக பார்க்காமல், நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.