காலையில் நிச்சயதார்த்தம்; இரவில் தற்கொலை செய்த பெண் இன்ஜினீயர் – சென்னையில் சோகம்

 திருமணம் பிடிக்காத சூழலில் மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்த்து விட்டு சென்றனர். அதனால் மனமுடைந்த பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார். 

சென்னை  திருமுல்லைவாயல், மணிகண்டபுரம் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ் (57). தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி ஷீலா (48). 

இவர்களின் மகள் லதீஷா (25) இவர்,  இன்ஜினீயரிங் படித்துவிட்டு சீனியர் இன்ஜினீயராக ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டிலிருந்தப்படியே வேலைப்பார்த்து வந்தார்.  

லதீஷாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தபோதெல்லாம் எனக்கு திருமணம் வேண்டாம். அதில் விருப்பம் இல்லை என லதீஷா கூறிவந்துள்ளார். 

அதற்கு அவரின் பெற்றோர், உனக்கு 25 வயதாகிவிட்டதால் வாழ்க்கைக்கு துணை வேண்டும் என்று அறிவுரை கூறி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். 

இதையடுத்து 11.10.2020-ம் தேதி காலையில் ராஜின் தூரத்து உறவினர்கள் லதீஷாவைப் பெண் பார்க்க வந்துள்ளனர். அப்போது பெண் வீட்டினருக்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது. 

அதைப் போல மாப்பிள்ளை வீட்டினருக்கும் லதீஷாவைப் பிடித்துவிட்டது. அதனால் இருவீட்டினரும் அடுத்தக்கட்ட திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

மாப்பிள்ளை வீட்டினர் சென்ற பிறகு லதீஷா, மீண்டும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது லதீஷாவின் பெற்றோர், மகளை சமதானப்படுத்தியுள்ளனர். 

பின்னர் அலுவலக வேலைக்காக மாடியில் உள்ள தனி அறைக்கு லதீஷா சென்று விட்டாள். இரவு சாப்பிடக்கூட அவர் கீழே இறங்கி வரவில்லை. அதனால் லதீஷாவின் பெற்றோர்,  இரவு 9.30 மணியளவில் அவளை சாப்பிட வருமாறு அழைக்க மாடிக்குச் சென்றனர். 

அப்போது அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதனால் கதவை தட்டிபார்த்தனர். ஆனால் லதீஷா திறக்கவில்லை. இதையடுத்து  கதவை உடைத்து உள்ளே சென்றபோது மின்விசிறியில் துப்பட்டவால லதீஷா தூக்குப் போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். 

அதைப்பார்த்து அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் லதீஷாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர். உடனடியாக லதீஷாவை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப்பரிசோதித்த மருத்துவர்கள்,  லதீஷா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீஸ்  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார், சம்பவ இடத்துக்கு வந்து லதீஷாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

லதீஷாவின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  திருமணம் பிடிக்காததால் பெண் இன்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *