பிஹார் தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர லாலு கட்சி முடிவு செய்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. அந்த கூட்டணி சார்பில் முதல்வர் நிதிஷ் குமார் இன்று 7-வது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த தலைவர்கள் புதிய அரசு பதவியேற்பு விழாவில் கல்ந்து கொள்ளவில்லை.
அந்த கட்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “பிஹாரில் ஆட்சி மாற்றத்துக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் செய்து தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதிய அரசு பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டோம். நாங்கள் மக்களின் பிரதிநிதிகள். மக்களோடு இருப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸும் பதவியேற்பு விழாவை புறக்கணித்தது.
லாலு பிரசாத்தின் இளைய மகனும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கடந்த 2 நாட்களாக பாட்னாவில் உள்ள தனது வீட்டிலேயே முடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சில தொகுதிகளில் மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் தோல்வி அடைந்துள்ளது. எனவே தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடர்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் தேஜஸ்வி யாதவ் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.