தமிழகத்தில் அரசு நூலகங்கள் திறப்பு

தமிழகத்தில் அரசு நூலகங்கள் செப்டம்பர் 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

தமிழக பொது நூலகத் துறையின் கீழ் 4 ஆயிரத்து 638 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 25-ம் தேதி நூலகங்கள் மூடப்பட்டன.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு அரசு பொது நூலகங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.

இதற்கான வழிகாட்டு நெறிகளை பொது நூலக இயக்கம் வெளியிட்டுள்ளது.

சென்னை கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள் ஆகியவை அனைத்து வேலை நாள்களிலும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

நூல் வழங்கும் பிரிவு, சொந்த நூல் படிக்கும் பிரிவு ஆகியவை மட்டுமே செயல்படும்.

மற்ற பிரிவுகளை திறக்க அனுமதியில்லை. கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்களில் நூல்கள் வழங்கும் பிரிவு மட்டும் செயல்படும்.

நூல் அடுக்குகள், நாற்காலிகள், மேஜைகள், கதவுகள், ஜன்னல், மாடிப்பிடி கதவுகள் என அனைத்து பகுதிகளையும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் அமைந்துள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை. மேலும் கட்டுப்பாட்டு பகுதி வாசகர்கள் நூலகங்களுக்கு செல்லக்கூடாது.

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறார் நூலகங்களுக்கு செல்ல அனுமதியில்லை. நூலக பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

நூலக வாயிலில் வாசகர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். நூல் அடுக்குகளுக்கு வாசகர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே வாசகர்களை அனுமதிக்க வேண்டும்” என்று பொது நூலக இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *