வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க மார்ச் வரை கெடு

வரும் மார்ச் மாதத்துக்குள் வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் 73-வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பங்கேற்று கலந்துரையாடினார்.

“பல வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண் இன்னும் இணைக்கப்படவில்லை. ஒவ்வொரு வாடிக்கையாளர் கணக்குடனும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த வங்கி நிர்வாகங்கள் வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் உறுதி செய்ய வேண்டும். பான் எண்ணை இணைப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும். ரூபே கார்டுகள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.