வட்டி மீதான வட்டி ரத்து சலுகையில் நவ.5-க்குள் வாடிக்கையாளர்கள் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன், வாகன கடன், நுகர்வோர் கடன், கல்வி கடன் உள்ளிட்ட அனைத்து தவணைகளையும் செலுத்த 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த காலத்தில் அரசு, தனியார் வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்து அந்த தொகையை வசூல் செய்தன. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதி அளித்தது. இதுதொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்பட்ட தொகை வரும் நவம்பர் 5-ம் தேதிக்குள் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் திருப்பிச் செலுத்தப்படும் என்று மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் உறுதி அளிக்கப்பட்டது.