பிரிட்டனிலும் கருப்பின இளைஞர் கழுத்தை நெரித்து கைது…

கடந்த மே 25-ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாண தலைநகர் மின்னபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கள்ள நோட்டு வைத்திருப்பதாக கடைக்காரர் ஒருவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார் ஜார்ஜ் பிளாட்டை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.


அப்போது போலீஸ் அதிகாரி டெரக் என்பவர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தில் முழங்காலால் மிதித்து அழுத்தினார். “என்னால் மூச்சு விட முடியவில்லை” என்று பிளாய்ட் மன்றாடியும் அந்த அதிகாரி கழுத்தை விடாமல் அழுத்தி நெரித்தார். இதன்காரணமாக கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார்.


இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இன்றுவரை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜார்ஜ் பிளாய்ட்’ கைது சம்பவம் போன்று பிரிட்டன் தலைநகர் லண்டனிலும் கருப்பின இளைஞர் ஒருவர் கொடூரமாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த வியாழக்கிழமை லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் மார்கஸ் குடெய்ன் என்ற கருப்பின இளைஞர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் மார்கஸை மடக்கி பிடித்து கைது செய்தனர்.


அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர், மார்கஸின் கழுத்தில் முழங்காலை வைத்து மிதித்து அழுத்தினார். மூச்சுவிட முடியாமல் திணறிய அந்த இளைஞர், “கழுத்தில் இருந்து காலை எடுங்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று பரிதாபமாக கெஞ்சினார்.


இந்த சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்தனர். போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மார்கஸின் கழுத்தில் இருந்து போலீஸ் அதிகாரி காலை எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பிரிட்டன் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


இதுகுறித்து போலீஸ் துணை ஆணையர் ஸ்டீவ் ஹவுஸ் கூறும்போது, “கைது சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *