மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் காடிவாட் கிராமம் அமைந்துள்ளது. அங்கு அரசு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது.
எனினும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை கற்பிப்பதில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.
மாணவ, மாணவியருக்கு ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக் கொடுக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் பள்ளி நிர்வாகம் தொடங்கியது.
இதற்காக 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரிடம் எந்த வெளிநாட்டின் மொழியை கற்க விருப்பம் என்று தனித்தனியாக கேட்டறியப்பட்டது.
இதில் பெரும்பாலான மாணவர்கள் ஜப்பானிய மொழியை கற்க விருப்பம் தெரிவித்தனர்.

எதற்காக ஜப்பானிய மொழியை கற்க விரும்புகிறீர்கள் என்று காரணம் கேட்டபோது, ரோபோக்கள், இயந்திரவியல் தொழில்நுட்பம் மீதான ஆர்வத்தால் அந்த நாட்டு மொழியை கற்றுக் கொள்ள விரும்புவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.ஆசிரியர்கள் யாருக்கும் ஜப்பானி மொழி தெரியாது.
இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் அவுரங்காபாத்தை சேர்ந்த மொழியியல் வல்லுநர் சுனில் ஜோக்டியோவின் உதவி நாடப்பட்டது.
அவர் மாணவ, மாணவியருக்கு இலவசமாக ஜப்பானிய மொழியை கற்றுக் கொடுக்க முன்வந்தார்.
இதுகுறித்து சுனில் ஜோக்டியோ கூறும்போது, “காடிவாட் அரசு பள்ளி மாணவர்களுக்காக இதுவரை 20 முதல் 22 வகுப்புகளை நடத்தியுள்ளேன்.
மிக குறுகிய காலத்திலேயே அந்த பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் ஜப்பானிய மொழியை கற்றுக் கொண்டுள்ளனர்.
சுமார் 70 பேருக்கு மொழிப்பாடம் நடத்தி வருகிறேன்” என்றார்.
காடிவாட் அரசு பள்ளி மாணவ, மாணவியர் தற்போது பள்ளி வளாகத்திலேயே ஜப்பானிய மொழியில் கலந்துரையாட தொடங்கிவிட்டனர். காடிவாட் கிராமம் ஒரு குட்டி ஜப்பானாக மாறி வருகிறது.