இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் ‘மலபார்’ போர் பயிற்சி வரும் 3-ம் தேதி விசாகப்பட்டினம் கடல் பகுதியில் நடைபெறுகிறது.
கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய, அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போர் பயிற்சிக்கு ‘மலபார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பான் கடற்படையும் இணைந்தது.
இந்த ஆண்டின் முதல்கட்ட ‘மலபார்’ போர் பயிற்சி விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா முறைப்படி அழைப்பு விடுத்திருக்கிறது. இதன்படி இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
இரண்டாம் கட்ட ‘மலபார்’ போர் பயிற்சி வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய கடற்படை சார்பில் அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி, கடல் கண்காணிப்பு போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன. அமெரிக்க கடற்படை சார்பில் விமானங்தாங்கி போர்க்கப்பல்கள் பயிற்சியில் இணைய உள்ளன.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கிகள் சுற்றித் திரிவதை ஆஸ்திரேலிய கடற்படை அண்மையில் கண்டுபிடித்து அழித்தது. சீனாவின் அத்துமீறல்களால் கடல்சார் பாதுகாப்பில் அந்த நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகள் ஓரணியில் திரண்டு வருகின்றன.
இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கின. ‘குவாட்’ என்று அழைக்கப்படும் இந்த கூட்டணி நாடுகள் அனைத்தும் முதல்முறையாக ‘மலபார்’ போர் பயிற்சியில் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.