மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.
மேற்குவங்கத்தில் கடந்த மார்ச் 27 முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும் பாஜகவும் சமபலத்தில் இருந்தன.
அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. இறுதியில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. எனினும் நந்திகிராம் தொகுதியில் முதல்வரும் அந்த கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தோல்வியை தழுவினார். பாஜக 77 இடங்களை கைப்பற்றியது. கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

அதிக இடங்களில் வெற்றி பெற்ற மம்தா மேற்குவங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை, நேற்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை மேற்குவங்கத்தின் புதிய முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஜெகதீப் தன்கர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். மம்தாவுடன் அமைச்சர்கள் பதவியேற்கவில்லை.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவியுள்ளார். அவர் தற்போது எம்எல்ஏவாக இல்லை. அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.