மம்தா பானர்ஜி நாளை முதல்வராக பதவியேற்பு

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக நாளை மேற்குவங்க முதல்வராக  பதவியேற்கிறார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. எனினும் அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

இந்த பின்னணியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணமூல் எம்எல்ஏக்கள் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.  

இதன்பின் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.இதன்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக நாளை மேற்குவங்க முதல்வராக பதவியேற்கிறார்.

முன்னதாக மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறும்போது, “நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியுள்ளோம். ஆனால் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல், நிர்பந்தம் இருப்பதால் அவர் எங்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத்தில் முறையிடுவோம்” என்று தெரிவித்தார்.

கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று அடுத்தடுத்து 2 முறை மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்துள்ளார். தற்போது 3-வது முறையாக அவர் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *