கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ட்விட்டரில் இன்று வீடியோ பதிவினை வெளியிட்டார்.
“கொரோனா வைரஸுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், கரோனா முன்கள பணியாளர்கள் தன்னலமின்றி சேவையாற்றினர். அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் கரோனா தடுப்பு பணியின் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 2020-21-ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும்.
இதன்படி, ‘கொரோனா போர் வீரர்கள்’ என்ற வகையில் ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகையை பெற தகுதியானவர்களின் வாரிசுகள் மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீட்டை பெறலாம். மத்திய தொகுப்பில் இருந்து உள்ஒதுக்கீடு வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
யார், யார்?
கொரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் உயிரிழக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்று கடந்த மார்ச் இறுதியில் மத்திய அரசு அறிவித்தது.
தூய்மைப் பணியாளர்கள், வார்டு பாய்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், மருத்துவர்கள், வல்லுநர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் சிறப்புக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.
அனைத்து அரசு சுகாதார மையங்கள், ஆரோக்கிய மையங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். இந்தத் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சுமார் 22 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த காப்பீடு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்தது. இவர்களே கொரோனா போர் வீரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.