தேர்தல் நடைமுறைகளில் இருந்து வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது. வணிக பொருட்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதுதொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும்போதெல்லாம் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக்குள்ளாவதும் தொடர்கதையாகி வருகிறது. தற்போதைய தேர்தல் நடத்தை நெறிமுறைகள் வணிகர்களையும், பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கிறது. பழைய நகைகளை விற்று சுய தேவை, கல்வி செலவு, திருமண செலவு போன்ற அவசர செலவினங்களுக்குகூட பணம் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் தேர்தல் நடத்தை விதிகளை அமல் செய்ய வேண்டும்” என்று விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.