தமிழகத்தில் டிச.15-க்குள் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
“ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் 2000 நடமாடும் மினி கிளினிக் துவங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த மினி கிளினிக்குகள் செயல்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் அடங்கிய மினி கிளினிகில் இருப்பார்கள்.
திருமண நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதில்லை. கோயில்களிலும், கடைகளுக்கு செல்லும் போதும் பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதை பார்க்கமுடிகிறது. மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நோய் கட்டுப்படுத்த முடியாது.
மருத்துவ வல்லுனர்கள் குழு கொடுக்கும் ஆலோசனைகள் படி முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்ததால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளது.இதுவரை 7525 கோடி ரூபாய் கொரனா தடுப்பு பணிக்காக செலவிடப்பட்டுள்ளது தமிழகத்தில் 5,22,530, காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. நாட்டிலேயே கொரோனா தொற்று கண்டறிய அதிகளவில் ஆய்வகங்கள் அமைத்தது தமிழகம்தான்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.