அமைச்சர் நாசரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் புரோக்கர்கள்

ஆவீன், பால்வளத்துறையில் பணியிடை மாறுதல், புதிய பணிநியமனங்களுக்கு இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரித்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ““`தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் பாக்கெட்களின் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்தது.

அதனால் ஆவின் பால் விலை விற்பனை அதிகரித்துள்ளது. விலை குறைப்பு மூலம் ஒரு கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். புதிதாக ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் ஆவினில் இணைந்ததால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆவின் பால் , பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களை புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட ஒன்றியங்கள் (ஆவின் ) மற்றும் பால்வளத்துறையில் செயல்பாடுகளை துரிதமாக விரைந்து நடவடிக்கை எடுக்க நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல்களுக்கு ஆணை வெளியிடப்படுகின்றது.

எனவே , ஆவின் பால்வளத்துறையில் பணியிடை மாறுதல் மற்றும் புதிய பணி நியமனங்களுக்கு இடைத் தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஊழல் செய்திருப்பதாக அமைச்சர் நாசர் தெரிவித்து வந்தநிலையில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக அமைச்சர் நாசருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *