இமயமலையின் கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றதால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் எழுந்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பால் சீன ராணுவம் தற்போது பின்வாங்கியுள்ளது.
சீனாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் எல்லையில் இந்திய ராணுவம் எதற்கும் தயார் நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள், பெருமளவில் ஆயுதங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் சீன எல்லையை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ளன.
லடாக்கின் லே விமானப் படைத் தளத்தில் அதிநவீன போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. அதிநவீன ட்ரோன்கள் மூலம் எல்லைப் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எல்லைப் பகுதிகளில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்லையில் ராணுவத்தின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாள்கள் பயணமாக இன்று லடாக் சென்றார். அவருடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளவதி நாராவனே ஆகியோரும் சென்றனர்.

லே பகுதியில் நடைபெற்ற போர் ஒத்திகையை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின்னர் வீரர்களிடம் அவர் பேசும்போது, “இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக்கூட உலகின் எந்த சக்தியாலும் அபகரிக்க முடியாது. இந்தியாவின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம். சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் இதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது” என்று தெரிவித்தார்.