பள்ளிக்கல்வித்துறையில் வரும் 13-ம் தேதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வருவதில்லை. தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
தனியார் பள்ளிகள் இந்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகின்றனர். தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் டிவி சேனல்கள் மூலம் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
இந்த புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
பள்ளிகள் திறப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் இந்தக் கல்வியாண்டு மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 30 சதவீகித பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து வரும் 13-ம் திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்றார்.