மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உதவியாளருடன் மாநிலம் முழுவதும் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார். 2021-22 நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு பட்டியலில் உள்ள 9,185 பேருக்கும் அவர்கள் விரும்பும் கருவி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இதற்கான நிதி ரூ.51 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தகுதிவாய்ந்த நபர்களுக்கு அவர்கள் பயன்படுத்த விரும்பும் சாதனங்களின் வகை, மாதிரியில் தெரிவினை வழங்கும் வகையில் நேரடி மானியம் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தும். மற்றொரு முன்மாதிரி திட்டமாக உலக வங்கியுடன் உதவியுடன் உரிமை திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது.
குறைபாடுகளை தொடக்க நிலையில் கண்டறிதல், தடுத்தல், பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் கல்விச் சேவைகளை பெருமளவில் அணுகுதல், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் அவர்களால் அமைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவித்தல், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகளை விரிவுபடுத்தலுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 6 ஆண்டுகளில் ரூ.1,702 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.