வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான 73 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை ரூ. 2,447 கோடியில் 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையின் திறப்பு விழா வாரணாசியில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.
“புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன. இந்த சட்டங்களால் பழைய நடைமுறைகள் மாறாது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக சில விவசாயிகளுக்கு இப்போது சந்தேகங்கள் ஏற்படலாம். ஆனால் வருங்காலத்தில் அவர்களது வருமானம் நிச்சயம் அதிகரிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
காசி விஸ்வநாதர் கோயில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை வழிபாடு நடத்தினார். வாரணாசி கங்கை நதிக் கரையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.