கடந்த 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் வாஜ்பாயை நினைவுகூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோ 1.49 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் வாஜ்பாயின் கடந்த கால புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
வீடியோவின் தொடக்கத்தில் வாஜ்பாயின் குரல் ஒலிக்கிறது. கடைசியில் வாஜ்பாயிடம் பிரதமர் மோடி ஆசி பெறும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

வீடியோவில் வாஜ்பாயின் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் பின்னணியில் ஓட, பிரதமர் நரேந்திர மோடி அவரது அருமை, பெருமைகளை அடுக்கியுள்ளார்.” அடல் ஜியின் தியாகத்தை இந்த நாடு ஒருபோதும் மறக்காது. அவரது தலைமையின் கீழ் இந்தியா அணு சக்தியாக உருவெடுத்தது.
ஒரு அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர் என பல்வேறு பொறுப்புகளை அடல்ஜி திறம்பட வகித்துள்ளார்.அவரது உரைகள் பிரபலமானவை.
நாடாளுமன்றத்தில் அவர் அதிக வார்த்தைகளை பேச மாட்டார். அவரது மவுனமே பல செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கும்” என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.