தமிழக வில்லு பாட்டுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை, ‘மனதில் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி, 69-வது மனதில் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பு செய்யப்பட்டது.
“நமது நாட்டின் வேளாண் துறையை விவசாயிகள் பலப்படுத்தி வருகின்றனர். சுய சார்பு இந்தியா திட்டத்தின் தூண்களாக விவசாயிகளும் கிராமங்களும் உள்ளன.
மகாத்மா காந்தியின் பொருளாதார தத்துவத்தின் சாராம்சத்தைப் பின்பற்றி இருந்தால், சுய சார்பு இந்தியா திட்டத்துக்கு தேவையே இருந்திருக்காது. இந்தியா எப்போதோ சுய சார்பு நிலையை அடைந்திருக்கும்.
வேளாண் மசோதாக்கள் மூலம் விவசாயிகள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர். அவர்களது தங்கள் உற்பத்தி பொருட்களை எங்கு வேண்டுமானாலும், சரியான விலைக்கு விற்க முடியும்.
கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை தலைதூக்கியபோது, நமது விவசாயிகள் சுய சார்பை மேம்படுத்தி தங்களது வலிமையைக் காட்டினர். வேளாண் துறையில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், மிகச் சிறந்த பலனை அடைய முடியும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் இதே கால கட்டத்தில் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மூலம் நமது ராணுவ வீரர்களின் துணிச்சலை, வீரத்தை இந்த உலகமே பார்த்தது.
நமது ராணுவ வீரர்கள், தாய்நாட்டின் பெருமையையும் மரியாதையையும் காப்பது ஒன்றே இலக்காகக் கொண்டு பணியாற்றுகின்றனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முகக் கவசம் அணியுங்கள், முகக் கவசம் இல்லாமல் வெளியில் சொல்லாதீர்கள்.
கதை சொல்லும் முறை மனித நாகரித்தைப் போலவே மிகவும் பழமையானது. தற்காலத்தில் அறிவியல் கதைகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. நாடு முழுவதும் பலர் கதை சொல்லும் கலையை பிரபலப்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த வித்யா என்பவர் வில்லுபாட்டு மூலம் புராணங்களை கதைகளாககக் கூறி வருகிறார்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.