கலாமுக்கு சலாம்.. பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

அப்துல் கலாமின் பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 89-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் கலாமுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு காணொலி காட்சிகளாக ஓடுகிறது. இந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி, கலாமின் அருமை, பெருமைகளை விவரித்துள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது:

கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கலாம் அளித்த பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்காது. 

ஒரு விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக அவர் நாட்டுக்காக அரும்பணியாற்றியுள்ளார். அவரது வாழ்க்கை பயணம், கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. 

டாக்டர் கலாம், அனைவருக்கும் சிறந்த முன்னோடி. வாழ்க்கை பயணத்தில் ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கு கலாம் மிகச் சிறந்த முன்னுதாரணம். 

தனது தேவை, சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை மாற்றியமைத்து கொண்டவர். அவர் மிகவும் எளிமையான மனிதர். மிக அபூர்வ குண நலன்களை கொண்டவர். 

‘நல்ல குண நலன்கள், திறமை, நிபுணத்துவம் மிக்க குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். திறம்வாய்ந்த ஆசிரியர்கள், மிகச் சிறந்த குடிமக்களை உருவாக்குகிறார்கள்’ என்று கலாம் அடிக்கடி கூறுவார். 

உங்களை மக்கள் எவ்வாறு நினைவுகூர விரும்புகிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கலாம், என்னை ஆசிரியராக நினைவுகூருங்கள் என்றார். 

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 2-வது நாளே அவர் சென்னைக்கு சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். புதிய திறமை, சிந்தனைகளை கலாம் தேடி அலைந்தார். 

குழந்தைகளை அவர் அதிகம் நேசித்தார். தனது சிந்தனைகளை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு அவர் உலகை விட்டு மறைந்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *