உ.பி. முதல்வர் அலுவலகம் முன்பு தாய், மகள் தீக்குளிப்பு

உத்தர பிரதேச முதல்வர் அலுவலகம் முன்பு தாயும் மகளும் நேற்று தீக்குளித்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உத்தர பிரதேசம் அமேதி அருகேயுள்ள ஜமோ கிராமத்தை சேர்ந்தவர் சோபியா. அவரது மகள் குடியா. அவர்களுக்கு சொந்தமான நிலத்தை ஒரு கும்பல் அபகரித்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தாயும் மகளும் புகார் செய்தனர். ஆனால் போலீஸார் வழக்கு பதிவு செய்யாமல் அலைக்கழித்துள்ளனர்.


இதனிடையே நிலத்தை பறித்த கும்பல், சோபியாவையும் குடியாவையும் அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்துக்கு சென்றபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இதைத் தொடர்ந்து தாயும் மகளும் நேற்று லக்னோவில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. விரக்தியடைந்த இருவரும் முதல்வர் அலுவலகம் முன்பாக தீக்குளித்தனர்.


பலத்த தீக்காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *