ஜூலை 6-ம் தேதி மகளின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவதில் காதல் தம்பதியினருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த பிரியங்கா, தன்னுடைய மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டார்.
பிறந்த நாள்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலை அடுத்த கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (27) இவர் சுய உதவிக்குழு ஒன்றில் தவணைதொகைகளை வசூலிக்கும் வேலை செய்து வந்தார். இவரும் காட்டுமன்னார்கோயில் அருகே ஆட்கொண்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரியங்காவுக்கும் (22) பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்தது.
இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு மீனலோட்சினி என்ற மகள் உள்ளார். மீனலோட்சினிக்கு வரும் 6-ம் தேதி பிறந்தநாள். அதை வெகுசிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தனர்.
அதில் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதுவே கடும் வாக்குவாதமாக மாறியுள்ளது. இருவரும் ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருந்துள்ளனர். அதன்பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குழந்தை கொலை
மனமுடைந்த பிரியங்கா, தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். தான் இறந்தபிறகு மகள் மீனலோட்சினி அநாதையாகிவிடுவாள் எனக் கருதிய பிரியங்கா அவளையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார்.
அதன்படி பாலமுருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனதை கல்லாக்கி கொண்ட பிரியங்கா, மீனலோட்சினியை சேலையால் தூக்குப்போட்டார். சிறிது நேரத்தில் குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது. பின்னர் அதே சேலையில் தூக்குப் போட்டு பிரியங்கா தற்கொலை செய்து கொண்டார்.
கணவன் கதறல்
இந்தச் சமயத்தில் பிரியங்காவைத் தேடி பக்கத்து வீட்டை சேர்ந்த தோழி ஒருவர் வந்து;ளளார். அப்போது பிரயங்கா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பரைதப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காட்டு மன்னார்கோயில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரியங்கா, மீனலோட்சினி ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலமுருகனுக்கு தகவல் தெரிந்ததும் அவர் கதறி அழுதப்படி அங்கு வந்தார். பிரியங்காவைப் பார்த்து இப்படி செய்வாய் என கனவில்கூட நான் நினைக்கலையே என அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
பாலமுருகன் அளித்த தகவலின்படி பிறந்தநாள் தகராறில் பிரியங்கா இந்த சோக முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
மகளைக் கொலை செய்து விட்டு தாய் தற்கொலை சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.