பச்சிளம் குழந்தைக்காக விமானத்தில் தாய்ப் பாலை அனுப்பும் அம்மா

லடாக்கின் லே பகுதியை சேர்ந்தவர் ஜிக்மெட் வாங்டஸ். கடந்த 2019-ம் ஆண்டில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டோர்ஜே பால்மோ என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கர்நாடகாவின் மைசூரில் மகாபோதி பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியின் மேலாளராக ஜிக்மெட் வாங்டஸ் பணியாற்றி வருகிறார்.


கணவன், மனைவி இருவரும் மைசூரில் தங்கியிருந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த டோர்ஜே சில மாதங்களுக்கு முன்பு லடாக்கின் லே நகருக்கு திரும்பினார். அங்குள்ள மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி டோர்ஜேவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தையால் பால் குடிக்க முடியவில்லை.

உடனடியாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை சேர்க்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். குழந்தையின் தந்தை ஜிக்மெட் வாங்டஸ் மைசூரில் உள்ளார். உடனடியாக அவர் சிறப்பு விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.


அதேநேரம், குழந்தையின் தாய்மாமன் ஜிக்மெட் கயால்போ மற்றொரு சிறப்பு விமானத்தில் லே நகரில் இருந்து டெல்லிக்கு குழந்தையுடன் வந்து சேர்ந்தார்.
டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அரிய வகை நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நான்கு நாட்களே ஆன அந்த பச்சிளம் குழந்தைக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. தற்போது குழந்தை நலமாக உள்ளது.

குழந்தை சிகிச்சை பெறும் மேக்ஸ் மருத்துவமனை.


குழந்தையின் தாய் டோர்ஜி, லே நகரில் உள்ளார். டெல்லியில் இருந்து லே நகரம் 1,000 கி.மீ. தொலைவில் உள்ளது. தாய்க்கோ, குழந்தைக்கோ கொரோனா தொற்று ஏற்பட்டால் பெரிய ஆபத்தாகிவிடும். எனவே தாயை டெல்லிக்கு அழைத்து வராமல், விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வாருங்கள் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


வேறு வழியின்றி டெல்லியில் இருந்து லே நகருக்கு தினமும் சிறப்பு விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வரப்படுகிறது. தந்தை ஜிக்மெட் வாங்டஸ், குழந்தையின் அருகே இருந்து கவனித்து வருகிறார். தாய் மாமன் ஜிக்மெட் கயால்போ தினமும் சிறப்பு விமானத்தில் லே நகருக்கு சென்று தாய்ப்பாலை வாங்கி வருகிறார்.


அடுத்த 3 வாரங்களுக்கு விமானத்தில் தாய்ப்பால் கொண்டு வரப்படும். அதன்பின் தாயோடு குழந்தை சேர்க்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *