மத்திய பிரதேசம் குணா பகுதியை சேர்ந்த விவசாயி ராம் குமார். இவரது மனைவி சாவித்ரி தேவி. இத்தம்பதிக்கு 7 குழந்தைகள் உல்ளனர். இருவரும் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தனர்.
இது அரசு புறம்போக்கு நிலம் என்று கூறப்படுகிறது. இந்த இடத்தில் கல்லூரி கட்ட மாநில அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அங்கு தங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வந்த ராம் குமார் குடும்பத்தினரை வெளியேற்ற போலீஸார் முயன்றனர்.
பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் இடம், வேறு வாழ்வாதாரம் இல்லை என்று கூறி ராம்குமாரும் அவரது மனைவியும் போலீஸாரிடம் மன்றாடினர். இதை போலீஸார் ஏற்கவில்லை. ராம்குமார் குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.
அப்போது கணவன், மனைவி, குழந்தைகளை போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கினர். குழந்தைகள் உட்பட அனைவரும் போலீஸ் முன்னிலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். ஆபத்தான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.