தோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…

கிரிக்கெட் ஜாம்பவான் தோனி -யின் பெருந்தன்மை மீண்டும் பேசும்பொருளாகி உள்ளது. துபாய் விமான பயணத்தில் தனது பிசினஸ் கிளாஸ் விமான இருக்கையை அவர் சக பயணிக்கு விட்டுக் கொடுத்தார்.

கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் தோனி அறிமுகமானார். கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றார்.

2007-ல் டி20, 2011-ல் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013-ல் சான்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை அவரது தலைமையிலான அணி வென்றது.

கடந்த 2014-ல் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் 2017-ல் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.
கடந்த 2014-ல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

மனைவி சாக்சி, மகள் ஷிவாவுடன் தோனி.
மனைவி சாக்சி, மகள் ஷிவாவுடன் தோனி.

எனினும் ஒரு நாள் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடி வந்தார். கடந்த 2019 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக வலம் வரும் மகேந்திர சிங் தோனி (வயது 39) கடந்த சுதந்திர தினத்தின்போது

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தார்.

எனினும் ஐபிஎல் போட்டிகளில் தோனி தொடர்ந்து விளையாட உள்ளார். இதற்காக அண்மையில் சென்னை வந்த அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியில் பங்கேற்றார்.

வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில நாட்களுக்கு முன்பு விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றது.

ரயிலில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 3-ம் வகுப்பு ஏசி, ஸ்லிப்பர் கிளாஸ் என பல்வேறு வகைகள் இருப்பது போன்று விமானத்தில் எகானமி கிளாஸ், பிசினஸ் கிளாஸ் ஆகிய பிரிவுகள் உள்ளன.

இதில் எகானமி கிளாஸின் கட்டணம் குறைவு, வசதிகளும் குறைவு. பிசினஸ் கிளாஸ் கட்டணம் அதிகம், கூடுதல் வசதிகள் உண்டு.

துபாய்க்கு சென்ற விமானத்தில் தோனிக்கு பிசினஸ் கிளாஸில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதே விமானத்தில் பிரான்சைஸ் டைரக்டர் கே.ஜார்ஜ் ஜானும் சென்றார்.

அவருக்கு எகானமி கிளாஸில் இருக்கை அளிக்கப்பட்டிருந்தது.
ஜார்ஜ் ஜான் சற்று உயரமானவர். அவரால் எகானமி கிளாஸ் இருக்கையில் காலை நீட்டி அமர முடியவில்லை.

இதுகுறித்து தோனியிடம் அவர் கூறினார். ஒரு நொடிகூட தோனி யோசிக்கவில்லை. தனது இருக்கையை ஜார்ஜ் ஜானுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு எகானமி கிளாஸ் இருக்கைக்கு சென்றுவிட்டார்.

தோனியின் பெருந்தன்மையை ஜார்ஜ் ஜான் ட்விட்டரில் வீடியோ பதிவுடன் வெளியிட்டுள்ளார். அதில் ஜார்ஜ் ஜான் கூறும்போது, “கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் தோனி. அவரது பெருந்தன்மையை அதைவிட பெரிது.

‘உங்களால் சரியாக அமர முடியவில்லை . நீங்கள் எனது பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்து கொள்ளுங்கள். நான் எகானமி கிளாஸ் இருக்கையில் அமர்ந்து கொள்கிறேன்’ என்று தோனி கூறி இருக்கையை மாற்றிக் கொண்டார். அவர் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *