இசைக்கு மயங்காதவர் இந்த உலகில் உண்டோ? நிச்சயமாக இல்லை. மென்மையை வருடும் கர்நாடக இசை முதல் தெறிக்கவிடும் பறை வரை ஒவ்வொரு இசையும் தனி ரகம்.
சாமானியன் முதல் மெத்த படித்த மேதைகள் வரை ஏதாவது ஓர் இசையை கேட்கும்போது தங்களை மறந்து காலில் தாளம் தட்டுவதை கண்கூடாக பார்க்க முடியும்.
மேற்கத்திய நாடுகளின் இணையத்தில் ஓர் இசை வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் ஒரு பெண், ஹார்ப் (நம்ம ஊரில் யாழ்) இசைக் கருவியை மெய்மறந்து வாசிக்கிறார்.

அப்போது அங்கு சுற்றித் திரியும் மான் ஒன்று இசையில் மயங்கி அந்த பெண்ணின் அருகே துள்ளி துள்ளி ஓடி வருகிறது. இளம்பெண்ணின் இசையில் மயங்கி அப்படியே சொக்கி நிற்கிறது. இந்த வீடியோ அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரலாக பரவி இப்போது ஆசியாவிலும் கால் பதித்துள்ளது.
ஊடக நண்பர்களின் விசாரணையில் வீடியோவில் யாழ் மீட்டும் பெண், கனடாவின் கியூபெக் நகரை சேர்ந்த நவாமி (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.
அவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் அண்மையில் ஹார்ப் வாசிக்க சென்றேன். அப்போது தொலைவில் ஒரு மான் சுற்றித் திரிந்ததை பார்த்தேன். நான் இசைக்க எனது தோழி வீடியோ எடுத்தாள்.
என்னை மறந்து இசைத்துக் கொண்டிருந்தபோது தொலைவில் நின்ற மான் துள்ளி, துள்ளி குதித்து எனக்கு அருகே வந்துள்ளது. அந்த மானுக்கும் எனது இசை பிடித்து விட்டது. திடீரென எனக்கு மிக அருகே மானை பார்த்தபோது அது என்னை தாக்க வருகிறது என்று பயந்துவிட்டேன். என்னைவிட மானுக்கு பயம் அதிகம். காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது” என்றார்.